சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் பணியாற்றிய நகரிலிருந்து சொந்த ஊருக்கு துவிச்சக்கர வண்டியில் செல்லும்போது சுமார் 500 கிலோமீற்றர் தூரம் எதிர் திசையில் சென்றுள்ளார்.
இந்நபர் சீனாவின் ஷாங்டோங் மாகாணத்திலுள்ள ரிஸாவோ நகரில் பணியாற்றுபவர். சீன புத்தாண்டு தினத்தையொட்டி தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு இவர் தரானார். இந்நபர் பணியாற்றும் ரிஸாவோ நகரிலிருந்து சுமார் 1700 கிலோமீற்றர் தூரத்தில் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் குய்கிஹார் எனும் நகரில் இவரின் வீடு உள்ளது.
பெரும்பாலான சீன மக்கள் விடுமுறையில் ஊருக்குச் செல்வதற்கு ரயில் அல்ல பஸ்ஸை பயன்படுத்தியபோது, 1700 கிலோமீற்றர் சைக்கிள் மூலம் பயணம் செய்யவதற்கு இவர் தீர்மானித்தார்.
ஆனால், தவறான திசையில் பயணத்தை ஆரம்பித்த இவர், சுமார் 500 கிலோமீற்றர் தூரம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தார். வரைபடங்கள் எதையும் பார்த்து அறிவதற்கு முடியாத நிலையில் இருந்த இவர், மற்றவர்களின் உதவியுடனேயே பாதையை அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்தார்.
அன்ஹுன் மாகாணத்தின் வுஹு நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கர வண்டியில் இவர் சென்றுகொண்டிருந்தபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவ்வீதியில் சைக்கிள்கள் செல்வதற்கு அனுமதியில்லாத நிலையில் பொலிஸார் அவரை வழிமறித்து விசாரித்தனர். அப்போதே அவர் எதிரான திசையில் 500 கிலேமீற்றர் தூரம் பயணம் செய்திருப்பதை பொலிஸார் உணர்ந்தனர்.
அந்நபர் மீது வுஹு நகர பொலிஸ் உத்தியோகத்தர்களும், நெடுஞ்சாலையில் கட்டணம் அறவிடும் உத்தியோகத்தர்களும் அனுதாபம் கொண்டனர்.
இதனால், அவரை மேலும் 2200 கிலோமீற்றர் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்ய வைக்காமல், அவர்கள் அனைவரும் இணைந்து, வாகனத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அந்நபரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.






