சிங்கமும் புலியும் இணைந்து பெற்ற குட்டியொன்று ரஷ்யாவிலுள்ள நடமாடும் மிருகக் காட்சிசாலை ஒன்றின் பார்வையாளர்களை வெகுவாககக் கவர்ந்துள்ளது.
பெண் புலியொன்றும் ஆண் சிங்கமொன்றும் இணைந்து இக் குட்டியை பெற்றுள்ளன. நவம்பர் 11 ஆம் திகதி நடமாடும் மிருகக் காட்சிசாலையொன்று சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த வேளையில் இப் புலிக்குட்டி பிறந்தது என இம்மிருகக் காட்சிசாலையின் பிரதான அதிகாரி எரிக் அய்ரபெட்யன் தெரிவித்துள்ளார்.
இரண்டரை மாத வயதான நிலையில் 5 கிலோகிராம் எடையுடன் இப்புலிக்குட்டி உள்ளது. இவ்வாறு சிங்கமும் புலியும் இணைந்து குட்டி ஈனுவது அரிதானதாகும்.
இத்தகைய குட்டிகள் பொதுவாக, சாதாரண சிங்கக்குட்டிகள் அல்லது புலிக்குட்டிகளைவிட பலவீனமானமாகக் காணப்படும் என மொஸ்கோவிலுள்ள டார்வின் நூதனசாலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் திமித்ரி மிலோசேர்டோவ் தெரிவித்துள்ளார்.
இதன் தாய் மேற்படி மிருகக் காட்சிச்சாலையின் ஒரேயொரு பெண் புலியாகும். அது 3 குட்டிகளை பிரசவித்த போதிலும் ஒன்று மாத்திரமே உயிர்தப்பியுள்ளது.
“இப் புலிக்குட்டியை நாம் கூண்டில் அடைத்து வைப்பதில்லை. ஏனெனில், வெளியே அதிக குளிராக உள்ளது. இது எவ்வேளையிலும் எமது அருகிலேயே உள்ளது. எமது கட்டிலில் அது உறங்குகிறது” என எரிக் அய்ரபெட்யன் தெரிவித்துள்ளார்.