நீண்டகால தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் விரைவுபடுத்தப்படவேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

403

 
நீண்டகாலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த தொண்டர் ஆசிரியர்களின் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (07.02.2017) நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணம் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம். இங்குள்ள மாணவர்கள் வளப்பற்றாக்குறையுடன் கல்வி கற்கும் அதேவேளை ஆசிரியர் வளம் இன்றியும் மிகவும் கஸ்ரப்பட்டே தமது கல்வியைத் தொடர்ந்தனர். இதன்போது மாணவர்களுக்கு கல்வியைப் புகட்டுவதற்காக பல இளைஞர், யுவதிகள் தொண்டர் ஆசிரியர்களாக எந்தவித கொடுப்பனவும் இன்றி பணியாற்றியிருந்தனர்.

இவர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்து தாம் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பலர் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தொண்டர் ஆசிரியர் பெயர் பட்டியலில் வவுனியா வடக்கில் உள்ள சிலர் விடுபட்டுள்ளனர். அவர்களையும் உள்வாங்கி அவர்களுக்கான நியமனத்தை விரைவுபடுத்த மத்திய, மாகாண கல்வி அமைச்சுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் செ.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் வன்னிப் பாரராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் 2016ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட பாடசாலை நுழைவாயில் பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.