கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!!

494

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த ராஜரட்ணம் 55 வயது மதிக்கதக்கவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் இடம்பெறவிருந்த திருவிழாவை கண்டுகளிக்க வந்து டிக்கோயா வனராஜா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்லும் வேளையில் டிக்கோயா தொழிற்சாலை கொங்கிறீட் பாதையில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 ஆண்கள் ஒரு சிறுவன், ஒரு பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் சடலம் குறித்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.