படிக்கும் வயதில் பாடம் எடுக்கும் 18 வயதான பேராசிரியர்!!

511

18 வயதான நபர் ஒருவர் துணை பேராசியராக தெரிவாகியுள்ள சம்பவம், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹொங்கொங்கை பூர்விகமாகவுடைய, மார்ச் டியான் என்ற 18 வயதான இளைஞர், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை பேராசியராக பதவியேற்றுள்ளார்.

மார்ச் டியான் சிறு வயது முதலே சிறப்பாக கற்று, கடந்த 2007ம் ஆண்டு அவரின் 9 வயதிலேயே, கணிதத்தில் முதல் தர நிலை மற்றும், புள்ளிவிபரவியலில் இரண்டாம் தர நிலைகளைக் கற்று, கல்வியியலுக்கான பொதுக் கற்கையை இங்கிலாந்தில் முடித்துள்ளார். ஆனால் பொதுவாக மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுப் பரீட்சைகளை எழுதுவார்கள்.

இந்நிலையில், அவர் அதே ஆண்டில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் இணைந்து, 4 ஆண்டுகள் கற்கையை மேற்கொண்டு, அவரது முதுகலை பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு தற்போது உலகின் முதல் 10 முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக கடமையாற்றுகிறார்.

அத்தோடு தான் ஒரு மேதை என அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், தான் இயல்பான கற்றல் நடவடிக்கைகளின் ஊடாகவே அனைத்து பரிட்சைகளையும் வெற்றி கொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.