சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா : நேரு விளையாட்டு அரங்கில் நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள்!!

303

cinema

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்காக சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. தியேட்டர்களில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பூங்காக்கள் தினமும் இலவச படங்கள் திரையிடப்படுவதால் களைகட்டி உள்ளன. வண்ண வண்ண போஸ்டர்கள் நகரமெங்கும் அலங்கரிக்கிறது. பதாதைகளும் பேனர்களும் வைக்கப்படுகின்றன.

21ம் திகதி மாலை 5.30 மணிக்கு விழா துவங்குகிறது. முதல் அமைச்சர் ஜெயலலிதா இதில் பங்கேற்று துவக்கி வைக்கிறார். அப்போது தமிழ் நடிகர், நடிகைகள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

22ம் திகதி காலை கன்னடநடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23ம் திகதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

24ம் திகதி நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்–மந்திரி கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா, கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சிவி, நாகார்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கின்றனர்.

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி சத்யம், அபிராமி, உட்லண்ட், 4 பிரேம்ஸ் தியேட்டர்களில் பழைய படங்கள் இலவசமாக திரையிடப்பட்டு சினிமா படப்பிடிப்புகளும் 24ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 4 மாநில நடிகர், நடிகைகளும் சென்னையில் குவிகிறார்கள். தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையினர் அரசுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.