முதல்-அமைச்சரின் 10 கோடி நிதி உதவி மகிழ்ச்சி அளிக்கிறது : பிலிம் சேம்பர் தலைவர்!!

311

jeyalalitha

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது..

வருகிற 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் இந்த விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

நூற்றாண்டு விழாவையொட்டி நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினமும் நடைபெறுகிறது. விழாவுக்காக, இதுவரை பார்த்திராத அளவில் மிகப்பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சினிமா நூற்றாண்டு விழா பற்றி தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் விவாதித்து வருகிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்களையெல்லாம் அழைத்து பேசினார். சினிமா நூற்றாண்டு விழாவுக்காக எவ்வளவு செலவு ஆகும் என்று விசாரித்தார். ஏறக்குறைய 30 கோடி செலவாகும் என்று தெரிவித்தோம்.

உடனே தமிழக அரசு சார்பில் அவர் 10 கோடி நிதி உதவி வழங்கினார்.
சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சிகளுக்கு சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த விழாவில் கலந்துகொண்டால்தான் சினிமாவில் அவர்கள் இருப்பது தெரியும். அல்லது சினிமாவிலேயே இல்லாததுபோல் ஆகிவிடும் என்று கல்யாண் கூறினார்.

அப்போது ஒரு நிருபர் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அழைக்கப்படுவாரா என்று கேட்டார். அதற்கு பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண் சினிமா துறையை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.

பேட்டியின்போது இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பிலிம் சேம்பர் செயலாளர் ரவி கொட்டா ரக்கரா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார், பொருளாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் அபிராமி ராமநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் அருள்பதி, செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், எடிட்டர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.