பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயார் : அப்ரிடி!!

291

afridi

பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு முகமது ஹபீஸ் தலைவராக பணியாற்றி வருகிறார்.

சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணி ஒரு ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டெஸ்டில் தோற்று இருந்தது. பலவீனமான சிம்பாவே அணியிடம் தோற்றதால் மிஸ்பா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தலைவராக இருக்க அப்ரிடி விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

நான் 17 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி உள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பதவியை மீண்டும் வழங்கினால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். சவால் நிறைந்த பதவி என்றாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன்.

தென் ஆப்பிரிக்க தொடரில் மூத்த வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுவது முக்கியமானதாகும் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆபிரிக்காவுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த போட்டி நடக்கிறது. மிஸ்பாவுக்கு இந்த தொடரில் கடைசி வாய்ப்பு வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டெஸ்டுக்கு மட்டும் அவர் தலைவராக நீடிப்பார் என்று தெரிகிறது. ஒரு நாள் போட்டிக்கு அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முகமது ஹபீஸ் 20 ஓவர் போட்டிக்கு தலைவராக இருப்பார். கடந்த உலக கோப்பை போட்டியில் அப்ரிடி பாகிஸ்தான் அணி தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.