பிறந்த குழந்தையை மூச்சு திணற கொன்ற தாய்!!

305

மும்பை, பவாய் சிவ்சக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த இரண்டாவது பெண் குழந்தையை மூச்சுத் திணறடித்து கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனா (23) என்ற பெண்ணுக்கு 2 வயதில் மூத்த புதல்வியொருவர் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீனாவிற்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவர் பப்லு பணிக்குச் சென்று திரும்பி வந்தார்.

அப்போது 2-வது குழந்தை வெகு நேரமாக அமைதியாக இருந்தது. இதுகுறித்து அவர் கேட்டபோது குழந்தை தூங்குவதாக மீனா கூறினார்.

சிறிது நேரம் கழித்து மீனா குழந்தையை எழுப்பினார். ஆனால் குழந்தை பேச்சு மூச்சு இன்றி கிடந்தது.

உடனடியாக அவர்கள் குழந்தையை ராஜவாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

இதைகேட்டு மீனா கதறி அழுதார். ஆனால் குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை.

தகவல் அறிந்து வந்த பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் குழந்தையின் தலையிலும் காயமிருந்தது. இதையடுத்து பொலிசார் குழந்தையின் தாய் மீனாவிடம் துருவிதுருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில்..

எனக்கு ஆண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே திருமணத்திற்கு பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன். இந்தநிலையில் எனக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது.

எனவே 2-வது குழந்தையாவது ஆணாக பிறக்க வேண்டும் என ஏக்கத்துடன் இருந்தேன். ஆனால் 2-வது குழந்தையும் பெண்ணாக பிறந்தது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. மனவேதனை அடைந்தேன்.

இந்தநிலையில் சம்பவத்தன்று குழந்தை அழுது கொண்டே இருந்தது. எனவே கோபத்தில் குழந்தையை வாய், மூக்கை பொத்தி மூச்சுத்திணறடித்தேன். மேலும் குழந்தையை தரையில் தூக்கி வீசினேன். இதில் குழந்தை பலியானது.

இந்தநிலையில் கணவரை ஏமாற்ற குழந்தை தூங்குவது போல படுக்க வைத்தேன். ஆஸ்பத்திரியில் அழுது நடித்தால் தப்பித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையால் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.