8000க்கும் அதிக கண்காணிப்பாளர் தேர்தல் பணிகளில்!!

455

ele

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களைக் கண்காணிப்பதில் 8000ற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல், கபே மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆகிய அமைப்புக்களின் சார்பில் தேர்தல் நடைபெறும் 10 மாவட்டங்களிலும் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பவ்ரல் அமைப்பு 10 மாவட்டங் களிலும் 4800 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் தினத்தில் 175 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



வடமாகாண சபைத் தேர்தல் குறித்துத் தமது அமைப்பு கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்த அவர் தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இலங்கை வந்திருக்கும் எமது ஆசிய வலைப்பின்னல் அமைப்பைச் சார்ந்த 8 சர்வதேச கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்கள் வடக்கில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறினார்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து நீதியான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியிருப்பதுடன் வாக்காளர்களைக் கூடியளவு வாக்களிக்கச் செய்வதே தமது பிரதான இலக்காக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் சார்பில் தேர்தல் நடைபெறவிருக்கும் 10 மாவட்டங்களிலும் 300 பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசங்க ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வடக்குத் தேர்தல் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் 150 கண்காணிப்பாளர்கள் வடக்கில் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும், தேர்தல் நடைபெறும் தினங்களுக்கு தேர்தல் செயலகங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு தேர்தல் ஆணையாளர் தமது அமைப்புக்கு விசேட அனுமதி வழங்கியிருப்பதாகவும் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் விரும்பிய நேரத்தில் செல்வதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுஇவ்விதமிருக்க கபே அமைப்பின் சார்பில் 10 மாவட்டங்களிலும் 3750 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அந்த அமைப்பின் பிரதம அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் 750 கண்காணிப்பாளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 460 கண்காணிப்பாளர்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 44 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் தேர்தல் தினத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இலங்கை வந்திருக்கும் 30 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளனர். பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினரும் வடக்கில் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.