மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான தீர்மானத்தை ஆராய்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனை தொடர்பாக நேற்று(15.02) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக யோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலணி இவற்றை பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பரிந்துரையினை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று(14) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன்,மரண தண்டனையைக் குறைத்தல், சிறைத்தண்டனைக்கு பதிலாக சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைகளை பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தல், அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு பகுதியளவில் அதனை செலுத்துவதற்கு சந்தர்ப்பமளித்தல், பொலிஸ் பிணை வழங்கல் மற்றும் புதிய சிறைச்சாலைகள் அமைத்தல் என்பன இந்த பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், அவை அனைத்தும் அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.