குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாகொல்லாகொட பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவரை அந்த தேவாலயத்தினுள் நிர்வாணமாக்கி வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாகச் கூறப்படும் தேவாலய பூசகர் ஒருவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹெட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஹல்மில்லேவ பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற பூஜை ஒன்றில் சந்தேக நபரான பூசகரைச் சந்தித்து தனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் அவளது உடம்பில் உள்ள திருஷ்டியை நீக்கினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும், நாகொல்லாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தேவாலயத்துக்கு குளித்துவிட்டு சுத்தமாக பூஜைப் பொருட்களுடன் வருமாறும் பூசகர் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தனது கணவருடன் தேவாலயத்துக்குச் சென்றுள்ளதோடு பூசகர் அப்பெண்ணின் கணவரை வெளியே அமரச் செய்துவிட்டு அவரை மாத்திரம் தேவாலய அறையினுள் அழைத்துச் சென்று உடம்பில் எண்ணெய் தேய்க்க வேண்டும் எனக் கூறி பெண்ணின் மேலாடைகளை கழையச் செய்து எண்ணெய் தேய்த்துள்ளார்.
அதன்பின்னர் பாய் ஒன்றில் அப்பெண்ணைப் படுக்க வைத்து உடம்பில் ஏனைய பகுதிகளுக்கும் எண்ணெய் தேய்க்க ஆயத்தமாகி தானும் நிர்வாணமானதால் அச்சமடைந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடிவந்து பிங்கிரிய பொலிஸ் நிலைத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து குறித்த தேவாலயத்திற்கு பொலிஸார் சென்ற போது சந்தேக நபரான பூசாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு பின்னர் மறுநாளான நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் பிங்கிரிய பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.