வவுனியாவில் 60 மில்லியன் யூரோ செலவில் கழிவு முகாமைத்துவ தொகுதி கையளிப்பு!!

225

 
வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று (16.02) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்ட அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் வவுனியா வைத்தியசாலையில் கழிவுகளை சுகாதார முறைப்படி அகற்றும் பொறிமுறை தொகுதிக்கான கட்டுமானங்கள் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்திலிங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர், ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கிருபாசுதன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் மு.மகேந்திரன் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து இந்த நிகழ்வில் கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் கூடிய மாகாணமாக வடக்கு மாகாணம் திகழ்கிறது. அதிலும் மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் நிலத்தடிநீர் மாசடைவதால் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இவ்வாறான திட்டங்களின் மூலம் தொற்று நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம். இதுவரைகாலமும் வைத்தியசாலை கழிவுகள் பாதுகாப்பற்ற முறையிலேயே அகற்றப்பட்டு வந்துள்ளது. தற்போது இதற்காக பிரத்தியேக அமைக்கப்ட்டுள்ள இந்த கழிவுமுகாமைத்துவ திட்டத்தின்மூலம் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்திய யுனொப்ஸ் நிறுவனத்திற்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேனை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் வடக்கின் ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளிலும் இவ்வாறான கழிவுமுகாமைத்துவ தொகுதிகளை அமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.