கோவை தொண்டாமுத்தூர் ஆலாந்துறையில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
கோவை தொண்டாமுத்தூர் ஆலாந்துறையில் உள்ளது கிராம நிர்வாக அலுவலகம். இதன் அருகே உள்ள நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வழியில் வசித்து வந்தவர் கல்பனா(46). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கல்பனா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 17 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டார். குழந்தைகளுடன் இங்கு வசித்து வந்தார். அதிகாலை அந்த பகுதியில் உள்ள கழிப்பறைக்கு பொது மக்கள் சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியின் கல்பனா அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து ஆலாந்துறை பொலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். யாரோ கல்பனாவை கடத்தி வந்து வல்லுறவு புரிந்து கொலை செய்திருப்பற்கான அடையாளங்கள் தெரிந்தன. தன்னை கொலை செய்தவரிடம் இருந்து தப்பிக்க கல்பனா போராடியுள்ளார். இதில் அவரது உடைகள் கிழிக்கப்பட்டிருந்தது.
கல்பனாவை வல்லுறவுக்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல் அவரை கழுத்தை நெரித்தும் தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொலை செய்துள்ளனர். கல்பனா இறந்ததை உறுதி செய்த பின்னர் பிணத்தை அங்கேயே வீசி சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் கல்பனாவை பூலுவபட்டி இலங்கை அகதி முகாமை சேர்ந்த உதயகுமார் (28) என்பவர் கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. உல்லாசத்துக்காக கல்பனாவை உதயகுமார் இந்த கழிப்பறைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் 2 பேருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் உதயகுமார் ஆத்திரம் அடைந்து கல்பனாவை கழுத்தை நெரித்தும், தண்ணீர் தொட்டியில் அழுத்தியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உதயகுமாரை பொலிஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.