நான் செரிலாக்ஸ், பாரக்ஸ் குடித்து வளரவில்லை.. ஏழ்மையில் வாடியவன் நான் -தனுஷ்..

457


images

நான் செரிலாக்ஸ் சாப்பிட்டோ பாரக்ஸ் குடித்தோ வளர்ந்தவன் இல்லை. இளம் வயதில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழ்மையில் வாடியவன் என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதையொட்டி அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன் இளமை நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.



ஏழ்மை..

அவர் கூறுகையில்  அடிப்படையில் ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. என் இளமை மிகுந்த வறுமையில் கழிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். என் அப்பா ஒரு மில்லில் மாதம் ரூ 15 கூலிக்கு வேலை செய்தார். நான் செரிலாக்ஸோ பாரக்ஸோ குடித்து வளரவில்லை. அதிகபட்ச நல்ல உணவு அக்கம்பக்கத்து வீடுகளில் கொடுத்த தயிர்சாதம்தான்.



அண்ணன் பட்ட கஷ்டம்..



நானாவது பரவாயில்லை என் அண்ணன் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் அம்மாவுக்கு இயல்பாகவே அவர் மீது பாசம் அதிகம். என் தந்தை அதற்குள் சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இயக்குநராகவும் ஆகிவிட்டார்.


ஹீரோவானது எப்படி?

என்னுடைய 16வது வயதில் அப்பா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவர் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை கூட்டிவந்துவிட்டார். முதல் படம் வெளியாகி நன்றாக ஓடினாலும் கூட என்னை ஒரு ஹீரோவாக யாரும் மதிக்கவில்லை. ஆனால் காதல் கொண்டேன் வந்தது. ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன்.


ரஜினியுடனான உறவு

எனக்கும் ரஜினிசாருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய உறவு சாதாரணமானதாகவும், நல்ல மதிப்புடையதாகவும் இருக்கிறது. அவருக்கு ஒரு படம் பிடித்து விட்டால் மருமகனாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அவரே முன் வந்து பாராட்டுவார்.

எப்போதும் ரஜினி ரசிகன்

காதல் கொண்டேன் படம் திரையரங்கில் நல்லா ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ரஜினி சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. என்னை அவரின் பண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே நான் அங்கு சென்றேன். அங்கு ரஜினி சார் என்னை வெகுவாக பாராட்டினார். நான் எப்போதுமே ரஜினிசாருடைய ரசிகன்தான். அது எப்போதும் எந்த வாழ்க்கையிலும் மாறாது.