ஓய்வு பெறும் எண்ணத்தை தள்ளிப்போட்ட உசேன் போல்ட்!!

278

London Olympics Athletics Men

உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் தனது ஓய்வு பெறும் முடிவை தள்ளிப் போட தீர்மானித்துள்ளார்.
ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் வரும் 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் போட்டிகளுடன் ஒய்வு பெறுவதாகக் கூறியிருந்தார்.

உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் எட்டு தங்கப் பதக்கங்களை குவித்துள்ள போல்ட் நேற்று லண்டனில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒய்வு பெறும் முடிவை ஒரு வருடம் தள்ளிப் போடுவதாக அறிவித்துள்ளார். இதனால் 2017ம் ஆண்டு உலக சம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கு பெறலாம் என்று அவர் கூறினார்.

தன்னுடைய ரசிகர்கள் இதனை விரும்புவதாகக் கூறிய உசேன் தனது அனுசரணையாளர்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அவருடைய பயிற்சியாளரும் இதற்கு சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

27 வயதாகும் உசேன் போல்ட் நான்கு வருடங்களுக்கு முன்னால் தான் நிகழ்த்திய 100மீ ஓட்டத்தில் 9.58 வினாடி மற்றும் 200மீ ஓட்டத்தில் 19.19 வினாடி சாதனை நேரத்தை இன்னும் குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்ற வருடம் இதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் காயம் காரணமாக தான் மெதுவாக ஆரம்பித்ததாகவும் உசைன் கூறினார். அடுத்த வருடம் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியிலும் பங்கு பெற விரும்புவதாக அவர் கூறினார்.