இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங்கிற்கு தகுதி உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
கடந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியுடன் யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் பிரான்ஸ் சென்று தீவிர பயிற்சி மேற்கொண்டு, உடற்தகுதி பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிரான இந்திய ஏ அணியை வழிநடத்தினார். இதில் 1-2 என்று தொடரை இழந்தாலும் யுவராஜ் சிங் மூன்று போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் உட்பட மொத்தம் 224 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இதனிடையே, இந்தியா வரும் அவுஸ்திரேலிய அணி ஒரு T20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணித் தேர்வு, வரும் 30ம் திகதி நடக்கிறது. இதில், யுவராஜ் சிங் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து கங்குலி கூறுகையில் யுவராஜ் சிங் முன்பு போல முழு வேகத்தில் துடுப்பாட்ட திறனை வெளிப்படுத்தியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இவர் இந்திய அணியில் இடம் பெற்றால் ஆச்சரியம் இல்லை. இதற்கு, 200 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் நடுவரிசையில் யுவராஜ் சிங் 4வது இடத்தில் களமிறங்கும் தகுதி உள்ளது எனவும் கூறினார்.