1004 அடி உயரமான கட்டடத்தில் தொங்கிக் கொண்டு போஸ் கொடுத்த ரஷ்ய மொடலுக்கு பொலிஸார் அழைப்பாணை!!

581

 
ரஷ்யாவைச் சேர்ந்த மொடல் ஒருவரான விக்டோரியா ஒடின்ட்கோவா, துபாயிலுள்ள 1004 அடி உயரமான கட்டடத்தின் உச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி தனது நண்பரின் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக விக்டோரியா ஒடின்ட்கோவாவுக்கு துபாய் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

22 வயதான விக்டோரியா ஒடின்ட்கோவா, ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர். மொடலாக இவர் பணியாற்றி வருகிறார். அண்மையில் இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்குச் சென்றபோது, அங்குள்ள 1004 அடி (306 மீற்றர்) உயரமான கேயான் டவர் எனும் கட்டடத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டு போஸ் கொடுத்தார்.

73 மாடிகளைக் கொண்ட இக்கட்டத்தின் உச்சியில் தனது நண்பர் ஒருவரின் கையை மாத்திரம் பற்றிக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார் விக்டோரியா.

அவர் எவ்வித பாதுகாப்புக் கவசத்தையும் அணிந்திருக்கவில்லை இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் விக்டோரியா ஒடின்ட் கோவா வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு தடவை இப் படத்தை பார்க்கும்போதும் எனது உள்ளங்கைகள் வியர்க்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், விக்டோரியா ஒடின்ட்கோவாவின் நடவடிக்கை மிக முட்டாள் தனமானது என பலர் விமர்சித்துள்ளனர்.
‘எந்த விலை கொடுத்தாவது கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ஒரு சிறுமியின் செயற்பாட்டைப் போல இது உள்ளது என ஒருவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்க வருமாறு விக்டோரியா ஒடின்ட்கோவாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்எத்திஹாத் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. ‘இந்த யுவதியின் நடவடிக்கை அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலானது. இவ்வாறு மீண்டும் செயற்படப் போவதில்லை என உறுதியளிக்கும் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு அவர் பணிக்கப்படுவார்’ என மேஜர் ஜெனரால் கலீல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்ஃபினிட்டி டவர் எனவும் அழைக்கப்படும் கேயான் டவர் கட்டடம் 2013 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.