பன்றிக்காய்ச்சலால் வடக்கில் இதுவரை 7 பேர் பாதிப்பு!!

253

கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் என்1எச்1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்கள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு மையத்தின் பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வடக்கில் 7ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் இருவரும் கிளிநொச்சி திருவையாறு மற்றும் மருதநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு கிளிநொச்சி வைத்தியசாலை தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சை வழங்கப்படுகின்றது. கிளிநொச்சியில் ஏற்கனவே 3 சிறார்களும் 30 வயதுடைய ஒருவரும் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 26 வயதுடைய பெண் ஒருவர் இந்தத் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டுப் பின்னர் வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று சாதாரண வைரஸ் காய்ச்சல் மூலம் ஆரம்பிக்கின்றது. சிறந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவைகள் மூலம்தான் இந்த நோய்த் தொற்றைக் கண்டறிய முடியும். காற்றினாலே இந்த நோய் பரவுகின்றது.

எனவே, அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் பஸ்கள், நிகழ்வுகள், கோயில்கள், ரயில்கள் போன்றவற்றில் நோய்த் தொற்று உடைய ஒருவர் தும்மும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் அதன் தொற்றுப் பரவும் தன்மை உள்ளது.

குறிப்பாக குளிரூட்டப்பட்ட அறைகள், மூடிய அறைகள் உள்ளிட்ட வெப்பம் குறைவாக உள்ள பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவும்.

அதிக காய்ச்சல், மூச்சுவிட சிரமப்படல், நெஞ்சுநோ, நெஞ்சுத் துடிப்பு, வயிற்றோட்டம் போன்றவை காணப்படின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.