11 ஆண்டுகளின் பின்னர் புகையிரத நேர அட்டவனையில் மாற்றம்!!

257

புகையிரத திணைக்களத்தினால் திருத்தம் செய்யப்பட்ட புதிய புகையிரத நேர அட்டவனை இன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டில் இருந்து 11 வருடங்களுக்கு பின்னர் மாற்றப்பட்ட நேரத்திற்கமைய இந்த புகையிரத நேர அட்டவனை தயாரிக்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு வருடம் புகையிர பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டமையை தொடர்ந்து புதிய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால் நேர அட்டவனையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தினமும் 24 மணித்தியாலங்கள் முழுவதும் 396 தடவைகள் புகையிரத பயணங்களும் 25 தடவைகள் ரயில் சேவையும் செயற்படுத்தப்படுகின்றது.

தற்போது பிரதான புகையிரத வீதியில் (கொழும்பு – பதுளை) நாளுக்கு 7 புகையிரதங்கள் பயணிக்கின்றன. இந் நிலையில் இந்த புகையிரத வீதியில் மேலும் புகையிரத சேவையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது மேலாளர் பீ.ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அச்சிடப்பட்ட நேர அட்டவனை இன்று முதல் புகையிரத செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள், புகையிரத சாரதிகள், காவலர்களிடம் வழங்குவதற்கு புகையிரத திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு அமைச்சரின் கோரிக்கைக்கமைய எதிர்வரும் மாதத்தில் இருந்து இந்த புதிய நேர அட்டவனையை பொது மக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதான புகையிரத நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில் புகையிரத பொது மேலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.