தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் வழங்கிய காலை உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இங்குள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 184 குழந்தைகள் படிக்கின்றனர்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள இவர்கள் நாள்தோறும் கூலி வேலைக்கு காலை நேரத்திலேயே வேலைக்குப் புறப்படுவதால் பெரும்பாலானவர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்குச் செல்கின்றனர்.
அப்படி போகும்போது குழந்தைகள் சோர்வடைந்து பள்ளியில் மயக்கமடை கின்றனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
இதையறிந்த பவானிசாகர் ஒன்றிய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் 2009ம் ஆண்டு முதல் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவச காலை உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்ததோடு அதைச் செயல்படுத்தினர். இதற்கான முன் அனுமதியை ஈரோடு தொடக்கக் கல்வி அலுவலரிடம் முறையாகப் பெற்று காலை உணவு வழங்கி வந்தனர்.
மேலும் சமையல்காரர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றமே சம்பளம் அளித்து இதனை அவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சத்துணவுத் திட்ட அலுவலர் பள்ளி வளாகத்தில் காலை உணவு வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.
எனினும் குழந்தைகளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் தாற்காலிகமாக பள்ளிக்கு வெளியே மரத்தடியில் உணவு சமைத்து வெட்ட வெளியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை காலையில் உணவு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பவானிசாகர் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்களது சொந்தச் செலவில் செய்து வரும் இச்சேவையை நிறுத்தினால் பாதிக்கப்படுவது ஏழைக் குழந்தைகள் தான்.
அவர்களின் நலன் கருதி இதனைத் தொடர்ந்து செயல்படுத்த நிரந்தர அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என்று கூறியுள்ளார்.