பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு கடத்தப்பட்ட 9 மாத குழந்தை மீட்பு!!

371

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காந்தல் பகுதியில் வசிப்பவர் ரியாஸ். இவர், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் சோயா கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராபியா. இவர்களது 9 மாத பெண் குழந்தை நிஷாரா.

ரியாஸ் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாடகைக்கு உள்ளதா என்பதைக் கேட்பதற்காக, ஃபர்தா அணிந்த இளம் பெண் ஒருவர் கடந்த இரு வாரங்களாக வந்து சென்றுள்ளார்.
பெங்களூருவில் இருந்து உதகைக்கு வந்துள்ளேன். தனது குழந்தையை இந்து நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க உள்ளேன். அதற்காக, அருகிலேயே வீடு வேண்டும். காந்தல், ஃபிங்கர்போஸ்ட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வீடு தேடி வருகிறேன். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலை வேண்டும் எனக் கூறி வந்தாராம்.

இந்நிலையில், அப்பெண் ராபியாவின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மீண்டும் வந்துள்ளார். அவருக்கு தேநீர் தயாரிப்பதற்காக, வீட்டில் இருந்தவர்கள் சமையலறைக்குச் சென்றுள்ளனர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையும், மேசை மீது வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கைப்பேசியையும் அப்பெண் திருடிச் சென்றுள்ளார்.

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுடன், ராபியா குடும்பத்தினர் குழந்தையை தேடி உள்ளனர். அப்போது, ஆட்டோவில் குழந்தையுடன் ஃபர்தா அணிந்த இளம் பெண் சென்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

உதகை பேண்ட்லைன் பகுதியில் அப்பெண் திருடிச் சென்ற கைபேசியின் சமிக்ஞைகள் கிடைத்ததால், சனிக்கிழமை இரவு முழுவதும் பொலிசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை பொலிசார் நேற்று அதிரடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பெண்ணை பொலிசார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது,

உதகை காந்தல் பகுதியில் காணாமல்போன குழந்தை, உதகை கூட்செட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை அக்குடியிருப்பை பொலிசார் கண்காணித்து வந்தனர். அப்போது, உதகை பிரீக்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வந்த இந்தி ஆசிரியர் அப்துல்ரஹீம் என்பவரின் வீட்டில் குழந்தை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த வீட்டுக்குள் புகுந்து பொலிசார் சோதனை நடத்தி, குழந்தையை மீட்டனர். குழந்தையைக் கடத்தியது, அப்துல் ரஹீமின் மனைவி பவுசியா என்பது தெரியவந்தது. அவருக்கு இரு ஆண் குழந்தைகள் என்பதால், பெண் குழந்தை ஆசையில் திருடியுள்ளார். கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து பவுசியாவை கைது செய்தனர் என்றார்.