பிரிட்டனில் மிக இளம் வயதில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் 18.8 கோடி ரூபா பரிசை வென்ற யுவதி ஒருவர், இந்த லொத்தர் வெற்றியினால் தனது வாழ்க்கை நாசமாகியுள்ளதாகக் கூறி மேற்படி லொத்தர் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஜேன் பார்க்ஸ் எனும் இந்த யுவதி, 2013 ஆம் ஆண்டு யூரோமில்லியன் எனும் லொட்டோ சீட்டிழுப்பில் 10 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 18.8 கோடி ரூபா) பரிசை வென்றார்.
அப்போது அவர் 17 வயதானவராக இருந்தார். இதன் மூலம் மிக இளம் வயதில் யூரோமில்லியன் சீட்டிழுப்பில் முதல் பரிசை வென்ற பெருமைக்குரியவரானார் ஜேன் பார்க்ஸ்.
லொத்தர் சீட்டிழுப்பில் எவருக்கும் இவ்வளவு பெருந்தொகை பரிசு கிடைத்தால் அதை தமது பேரதிர்ஷ்டமாகவே அவர்கள் கருதுவர்.
ஆனால், தற்போது 21 வயதான ஜேன் பார்க்ஸ் இதில் திருப்தியடையவில்லை. இந்த லொத்தர் பரிசு காரணமாக தனது வாழ்க்கை நாசமாகி விட்டது என்கிறார்.
இவர் மேற்படி லொத்தர் பணத்தில் இரு வீடுகளை வாங்கியதுடன் தனது மார்பகங்களைப் பெரிதாக்குவதற்கான சத்திர சிகிச்சையையும் செய்துகொண்டார்.
தனது காதலனுக்கும் அவர் பெருமளவு அன்பளிப்புகளை வழங்கியிருந்தார். ஆனால், பின்னர் அக்காதலனிடமிருந்து அவர் பிரிந்தார்.
இந்நிலையில் அண்மையில் அளித்த செவ்வியொன்றில் ஜேன் பார்க்ஸ், இது தொடர்பாக கூறுகையில், மிக இளம் வயதிலேயே மில்லியனரானதால் தான் பெரும் மன அழுத்ததத்துக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.
‘அப்பரிசு எனக்கு கிடைத்திருக்கவே கூடாது என எண்ணுகிறேன். 18 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த லொத்தர் சீட்டை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கருதுகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.







