வவுனியாவில் கடந்த இரு மாதங்களில் 96 பேருக்கு டெங்கு நோய்த்தாக்கம்!!

568

வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

2017 ஆம் ஆண்டு தைமாதம் முதல் மாசி மாதம் 21ஆம் திகதி வரை 96 பேர் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த விடயத்தில் அக்கறை கொண்ட வவுனியா சுகாதார வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் பகுதியைச் சேர்ந்த பொதுச்சுகாதாரப் பரிசோதகர், மலேரியா தடை இயக்கம், பூச்சி ஆய்வாரள்கள் மேற்கொண்ட விசேட நடவடிக்கை காரணமாக டெங்கு பரவக் கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பில் கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் வைத்திய பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரச திணைக்களங்கள், விடுதிகள், தனியார் விடுதிகள், பொதுமக்கள் வீடுகள் என்பவற்றையும், உங்களுடைய சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். மாறாக நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.