வவுனியா ​தட்சணாங்குளம் மயானத்தை தோண்டும் பணி நிறுத்தம் : நடந்தது என்ன?

567

 
வவுனியா பண்டாரிகுளம், தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்ட போதும் பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா, பண்டாரிகுளம் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நடமாடியிருந்ததுடன், அங்கு மூன்று இடங்களில் குழிகள் வெட்டப்பட்டும் இருந்தன. அக் குழி ஒன்றின் அருகில் இராணுவத் தேவைக்கு பயன்படுத்தப்படும் உரைப்பை ஒன்றும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த மயானத்தில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் அல்லது நகைகள் இருக்கலாம் எனக் கருதி பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். செவ்வாய்கிழமை காலையிலிருந்து மயானத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா நீதிமன்றின் அனுமதி பெற்று நீதிமன்ற உத்தியோகத்தர் என்.முருகதாஸ் முன்னிலையில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உமாபதி, வவுனியா பொலிஸ் நிலை பதில் பொறுப்பதிகாரி, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், விசேட அதிரடிப்படையினர், தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த பகுதி கனகரக வாகனத்தின் உதவியுடன் தோண்டப்பட்டது. நீண்ட நேரமாக தோண்டப்பட்ட போதும் அப்பகுதியில் இருந்து எவையும் மீட்கப்படவில்லை. அதன் பின்னர் அக்குழிகள் மீண்டும் மூடப்பட்டன.

இதேவேளை, குறித்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதி தோண்டப்பட்டு அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காணாமற்போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.