வவுனியா அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த விக்ஸ் காட்டு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில்!!

345

 
வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியில் வனத்துறையினரின் காணியில் கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்கள் தமக்கான காணி அனுமதிப்பத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து நேற்று (22.02.2017) முதல் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இன்று (23.02.2017) காலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டிற்கு விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர், வன இலகா அதிகாரி, வவுனியா பிரதேச செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் உட்பட உயர் மட்டக்குழுவினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அப்பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் 47 குடும்பங்களுக்குமான காணியினை தெரிவு செய்துள்ளதுடன் அப்பகுதியில் மக்களை குடியமர்த்தவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

குறித்த 47 குடும்பங்களைத் தவிர வேறு எவரும் அப்பகுதிக்குள் சென்று காணி பிடித்து குடியமர முடியாது என்று வன இலகா அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மீறி அப்பகுதியில் குடி அமர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்..

தற்போது ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் எம்மால் இனங்காணப்பட்ட பகுதியில் 47 குடும்பங்களுக்கும் காணி பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மூன்று மாத கால அவகாசத்தின் பின்னர் அக்காணியினை வன இலகா திணைக்களமிடமிருந்து பெற்றுத் தருவதாகவும் அது வரையில் குறித்த ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருக்குமாறும் வன இலகா அதிகாரிகளால் எவ்வித இடையூறும் எற்படாது என்றும் தெரிவித்தார்.

எனினும் போராட்டம் மேற்கொள்பவர்கள் தமது வசிப்பிடக்காணியினைப் பெற்றுத்தருமாறும் வேறு பகுதிகளில் தம்மால் சென்று குடியமர முடியாது என்று தெரிவித்து தொடர்ந்து தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.