தூத்துக்குடியின் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம் என்ற சிங்காரவேலன் (வயது 42). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இவர் மீது பல்வேறு கொலை வழக்கு, அடிதடி மற்றும் மிரட்டல் வழக்குகள் உள்ளன, இந்நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த சிங்காரவேலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இன்று கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தூத்துக்குடி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனைச்சாவடியை கடக்க முயன்ற போது, 15 பேர் கொண்ட கும்பலொன்று பொலிஸ் வாகனத்தை நோக்கி ஓடிவந்தது.
அரிவாள், உருட்டுகட்டையுடன் வந்த கும்பல் பொலிஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன் பொலிஸ் மீது மிளகாய் பொடிகளை தூவியுள்ளனர்.
இந்த நேரத்தில் ரவுடியை வெட்டிக் கொலை செய்துள்ளனர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிங்காரவேலனை பொலிஸ் அதிகாரிகள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிங்காரவேலன் பரிதாபமாய் உயிரிழந்தார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







