கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்ற பிரச்சாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இந்தாண்டு முதல் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடத்தப்படாது எனவும், ஒக்ரோபர் மாதம் நடைபெறும் எனவும் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பேராசிரியர் அமல் குணரட்ன என்ற பெயரிலான ஒருவரினால் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட ஆவணமொன்றின் மூலம் இவ்வாறு சாதாரண தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையிலான குழுவொன்று இவ்வாறு கூடி தீர்மானித்துள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வழமை போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாகவும் ஒக்ரோபர் மாதம் பரீட்சை நடாத்துவது குறித்து எந்த இடத்திலும் பேசப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் என்.ஜே. புஸ்பகுமார கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.






