தமிழகத்தின் கோவை ஈஷா மையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய பிரதமர் மோடி அணிந்திருந்த சால்வையை தருமாறு டுவிட்டரில் பெண்ணொருவர் கோரிக்கை விடுத்ததன் பேரில் பிரதமர் அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி நரேந்திர மோடி கடந்த 24 ஆம் திகதி திறந்து வைத்துள்ளார்.
அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியுள்ளார். குறித்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு ஆதியோகி படம் இடம்பெற்ற சால்வை ஒன்றினை ஈஷா யோகா மையத்தின் நிறுவுனர் ஜக்கி வாசுதேவ் அளித்துள்ளார்.
விழா முழுவதும் பிரதமர் மோடி அந்த சால்வையை அணிந்திருந்தார். அந்த சால்வையை தனக்கு தருமாறு பிரதமர் மோடியிடம், டுவிட்டர் மூலம் டில்லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி என்ற பெண்ணொருவர் கேட்டிருந்தார். இதையறிந்த பிரதமர் மோடி, சால்வையுடன், தனது கையெழுத்திட்ட கடிதத்தினையும் ஷில்பி திவாரிக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் அனுப்பிய சால்வை மற்றும் கடிதத்தின் புகைப்படங்களை ஷில்பி திவாரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன், தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து பிரதமர் மோடி, சால்வையை பரிசாக வழங்கியது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.







