ஒஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து குஜராத்தி படம் பரிந்துரை : மோடி வாழ்த்து!!

289

oscar

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுவது ஒஸ்கர் விருதுகள். இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்படும்.

அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்படும் திரைப்படத்தை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
ஒஸ்கார் பரிந்துரைக்கு தி லஞ்ச் பாக்ஸ், பாக் மில்கா பாக், இங்கிலிஷ் விங்கிலிஷ், மலையாள படமான செல்லுலாய்டு, கமல்ஹாசனின் விஸ்வரூபம், குஜராத்தி படமான தி குட் ரோட் உள்ளிட்ட 22 படங்கள் போட்டியில் இருந்தன.

19 பேர் கொண்ட தேர்வுக்குழு 5 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு தி குட் ரோட் படத்தை ஒஸ்கார் பரிந்துரைக்கு தேர்வு செய்து அறிவித்தது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்படுகிறது.

கியான் கோராவின் இப்படத்திற்கு சிறந்த குஜராத்தி படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறைக்கு கட்ச் பகுதிக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் பாலைவனத்தில் காணாமல் போகிறான். பின்னர் அவனை கண்டுபிடிப்பதே கதையின் மையக்கரு.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இப்படத்தை தயாரித்துள்ளது. 42 வயது கோரியாவுக்கு இது முதல் படம். பாலைவனத்தில் தொலைந்து போகும் 7 வயது சிறுவன் ஆதித்யாவாக கேவல் கட்ரோடியா நடித்துள்ளார். அவரது பெற்றோராக அஜய் கேகி-சோனாலி குல்கர்னி நடித்துள்ளனர்.

குஜராத்தி படம் ஒஸ்கார் விருது பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டதைக் கேட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.