இந்திய திரையுலகிற்கு கலைஞர்களின் பங்கு மகத்தானது : ஜெயலலிதா பாராட்டு!!

419

jayalalitha

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவை முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலா ஆகியோரும் குத்துவிளக்கேற்றினர். விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது..

இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் பிரமிக்கத்தக்க சாதனையாகும். ஊமைப்படமாக தொடங்கிய சினிமா, பேசும் படம், வண்ணப்படமாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சினிமா கண்டுபிடிக்கும் முன் இசை, ஓவியம் மற்றும் நாட்டியக் கலைகள் மக்களை மகிழ்வித்தன.

100 நாட்கள் ஓடிய படம் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும். பிற கலைகளைவிட கவர்ந்திழுக்கும் வலிமை திரைப்படத்துக்கு அதிகம். நடிகர்கள், நாடக கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்ள். புகைப்படக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள் என எண்ணற்றோரின் பங்கு இந்திய திரையுலகிற்கு மகத்தானது.

ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, தங்கவேலு, நாகேஷ், சத்யஜித்ரே, திலீப் குமார், பீம்சிங், எம்.ஜி.ஆர், சங்கர், ஏ.பி.நாகராஜன், என்.எஸ்.கே., ஜெமினி, ரங்கராவ் உள்ளிட்ட பலரும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை பரப்பி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளனர்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்போதைய தமிழ் சினிமா எதிரிகளை அழிக்கும் நிலைதான் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக திரைப்படத்துறை மிக சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

சமூகத்தை நல்வழிப்படுத்துவதே திரைப்படத்துறையின் நோக்கமாக இருக்கவேண்டும். வன்முறை, ஆபாச காட்சிகளை தவிர்த்து திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று அவர் பேசினார்.

பின்னர், இந்திய சினிமாவை நினைவுபடுத்தும் வகையில் காணொளி காட்சி திரையிடப்பட்டது. இதனையடுத்து, பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.சரவணன், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், பிரபு, விவேக், நடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், சௌகார் ஜானகி, மீனா, சிம்ரன், திரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா, இயக்குனர்கள் மகேந்திரன், பி.வாசு, இசையமைப்பாளர் இளையராஜா, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி, கவிஞர் புலமைப்பித்தன், அபிராமி ராமநாதன், ஆர்.பி.சௌத்ரி உள்ளிட்ட பலருக்கும் முதலமைச்சர் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.