கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை!!

480

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் முத்துராமலிங்கம் படத்தைத் திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த், நடிகர் நெப்போலியன் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் படம் முத்துராமலிங்கம்.

குளோபல் மீடியா வேர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்து உள்ள இந்த படத்தில் நடிகர்கள் சுமன், சிங்கமுத்து, சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சென்னை உள்பட தமிழகத்தில் பிப்ரவரி 24 முதல் வெளியாகி ஓடி வருகிறது.

இந்த நிலையில், ’யாகூ பைனான்ஸ் கன்சல்டன்ட்´ நிறுவனத்தின் உரிமையாளர் எம்.வி.பிரகாஷ் என்பவர் முத்துராமலிங்கம் படத்தைத் மேலும் திரையிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முத்துராமலிங்கம் படத்தின் தயாரிப்பாளருக்கு 28 லட்சத்து 55 ஆயிரம் கடனாக அளித்தேன். படம் திரையிடுவதற்கு முன்பாக, முழுத் தொகையையும் செலுத்துவதாக தயாரிப்பாளர் என்னிடம் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பித் தரவில்லை. எனவே, அவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முத்துராமலிங்கம் படத்தின் தயாரிப்பாளர் டி.விஜய் பிரகாஷ், ர29 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது.

ஆனால், அந்தத் தொகையைச் செலுத்தவில்லை. ஆகையால், படத்தை மேலும் திரையிட தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், முத்துராமலிங்கம் படத்தைத் திரையிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.