நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த மகன் பரிதாபமாக சுட்டுக்கொலை : தந்தை கதறல்!!

691

 
எனது மகன் நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த நிலையில் சடலமாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன் என களுத்துறைச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனின் தந்தையார் ப.சிவானந்தம் தெரிவித்தார்.

எனது மகன் தர்மிகன் அடுத்தவருடம் நியுசிலாந்து செல்லவிருந்தவர். அதற்கான ஆங்கில உயர்பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்பதற்காக எதிர்வரும் 10ஆம் திகதி வருவேன் என்றுகூறி வேலைக்குச் சென்றவரை களுத்துறை ஆஸ்பத்திரியில் சடலமாப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன் என தந்தை தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு சடலத்தை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குடும்பத்தினரிடம் கையளித்த நிலையில், தந்தை தனது கவலையை வெளியிட்டார்.

எனது மூத்தமகன் தர்மிகன். வெளிநாடு செல்லவேண்டும் என்பதற்காக ஆங்கில உயர்பரீட்சை எழுதுவதற்கு வசதியாக கொழும்பில் படிக்கலாம் என்பதற்காக சிறைச்சாலைத் திணைக்களத்தில் இணைந்து பணியாற்றினார். அவருக்கு சிறைச்சாலை நிருவாகமும் போதிய ஒத்துழைப்பையும் வசதியையும் வழங்கியிருந்தது.

அடுத்தவருடம் அவர் நியுசிலாந்து செல்லவிருந்தார். அதற்காக இந்தவருடம் ஏப்ரல் மாதத்தோடு தொழிலை விட திட்டமிட்டிருந்தார். அவர் சேவையில் இணைந்து ஒருவருடமும் 08 மாதங்களுமாகின்றன. மாத்தறை மகசின்

களுத்துறை சிறைச்சாலைகளில் அவர் கடமைபுரிந்துள்ளார். கடந்தவாரம் சிவராத்திரி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து சென்றார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் எனது போனுக்கு களுத்துறைசிறைச்சாலை பஸ் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது. எனது மகனும் அங்கு வேலை செய்வதால் உடனடியாக களுத்துறை சிறைச்சாலையை தொடர்பு கொண்டேன். எனினும் அங்கு பதில் இல்லை.

இனத்போது எனது மகனோ வேலை செய்யும் யாழ்ப்பாண நண்பரொருவர் மகனின் சூட்டுச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் கல்முனை சிறைச்சாலை அதிகாரியும் ஊர்ஜிதப்படுத்தினார்.

இதனையடுத்து களுத்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக சென்றோம். நாம்செல்ல முன்னரே அங்கிருந்த சட்டவைத்திய அதிகாரி சென்று விட்டார். அதனால் அன்றிரவு அடையாளம் காட்டமுடியவில்லை

காலையில் சென்று மகனை அடையாளம் காட்டினோம் .பின்பு பிரேதபரிசோதனை நடாத்தப்பட்டது. பி.ப.2 மணியளவில் சடலத்தை விடுவித்தார்கள். சிறைச்சாலைத்திணைக்களத்தினர் சடலத்தை களுத்துறையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் கொண்டு சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.

இதனையடுத்து சடலம் காரைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை கண்ணீரோடு மேலும் கூறினார்.