பன்றிகெய்தகுளத்தில் வைத்து பாடசாலை போவதாக 1990 ஆண்டு புரட்டாதி மாதம் இரண்டாம் திகதி காணாமல் போனவர் தொடர்பில் இன்னும் ஒரு முடிவும் இல்லை. இராணுவம் தான் கொண்டு போய் இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
பின்னர் 2008ம் ஆண்டு ஆனி மாதம் 25ம் திகதி வீரபுரத்தில் அண்ணனின் மகன் வீட்டில் சாப்பிடப் போய் இருக்கும் போது வெள்ளை வானில் வந்தவர்கள் மகனை சேட்டில் பிடித்து இழுத்து, அவர் ஓடுவதற்குத் தீர்மானிக்கின்றார் என்று நினைத்து தள்ளி விழுத்தி 5,6 பேர் சேர்ந்து வெள்ளை வானில் கொண்டு போனவர்கள்.
என் மகனுக்கு இரண்டு பிள்ளைகள் அவரை கொண்டு போகும் போது மூன்றரை வயது இப்போது பன்னிரண்டு வயதாகி விட்டது. தாய் வேறு திருமணம் செய்துவிட்டார். இரண்டு பிள்ளையையும் நான் தான் பராமரித்து வருகின்றேன். எங்களுடைய நிலைமை ஒருவருக்கும் தெரியாது. கடவுள் ஒருவருக்கு தான் தெரியும். இந்த பிள்ளைகளை எப்படி வளர்கின்றேன். என்ன மாதிரி வளர்கின்றேன் என்று.
இதே போல் எத்தனையோ ஆயிரம் மக்களுக்கு இப்படியான நிலைமை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் இந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வர வேண்டும். இன்றைக்கு பத்தாவது நாளாக இந்த போராட்டத்தில வருந்திக்கொண்டு இருக்கின்றோம்.
அது மட்டுமல்ல போன மாதமும் நான்கு நாள் போராட்டத்தில வெளிவிவகார அமைச்சரின் பேச்சை கேட்டு எல்லோரும் ஏமாந்து போனோம். இது போல் ஏமாறமால் வெளிநாடு எந்த நாடாக இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு தர வேண்டும்.
ஐநா, ஜெனீவா, வெளிநாடு என்றில்லாமல் இதற்கு ஒரு முடிவு வேண்டும். மகிந்த செய்தது போல் அல்லது மைத்திரி செய்தது போல் என்று குறித்து சொல்லவில்லை. ஒரு நல்லாட்சி கிடைக்க வேண்டும். நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுவதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.
இதற்கு நல்லாட்சி நல்ல நிலைமை, நல்ல முடிவு, நல்ல தீர்வு காண வேண்டும் என்று வருந்தும் மக்களுக்கோர் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.










