டிரம்பின் தொலைபேசி உரையாடலை ஒபாமா ஒட்டு கேட்டாரா?

693

ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரைகளை பராக் ஒபாமா ஒட்டு கேட்டதாக டிரம்பால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை எஃப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மறுத்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என நீதித்துறையை, கோமி கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறை இன்னும் அவ்வாறு நிராகரிக்கவில்லை.

முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கிளப்பர், ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசியோ அல்லது அவரின் தேர்தல் பிரசார குழுவின் அலைபேசியோ ஒட்டுக் கேட்கப்படவில்லை என மறுத்திருந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஒபாமாவின் அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா என கண்டறிய வெள்ளை மாளிகை நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டு பற்றி விசாரித்து வரும் நாடாளுமன்ற உளவுத் துறை கமிட்டியும் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.