புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் – குருணாகல் வீதியின் மதுரகம பிரதேசத்தின் காட்டுப் பகுதியிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட, இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் தலையில்லாத நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து உடனடியாக அது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அச்சடலத்தை மீட்டுள்ளனர்.
அதன்பின், குறித்த இடத்திற்குச் சென்ற புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான குழுவினர் ஆரம்பக் கட்ட விசாரணைகளை நடத்தினர். அப்பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சடலம் காணப்பட்ட இடத்துக்குச் சற்று தொலைவில் வீசப்பட்டிருந்த கத்தி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற புத்தளம் பதில் நீதிவான் எம். ஏ. பசால் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டதோடு குறித்த பிரதேசத்தில் மீண்டும் தேடுதல் நட வடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை புத்தளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் குழுக்கள் சடலம் காணப்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது சடலம் காணப்பட்ட இடத்துக்குச் சற்று தொலைவில் மீட்கப்பட்ட கத்தி கிடந்த திசையில் சென்ற மோப்ப நாய்கள் அவ் வழியே சென்ற போது சற்று தொலைவில் பை ஒன்றில் காணப்பட்ட தலையை கண்டுபிடித்தன. இத்தலையானது மேற்படி சடலத்தினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ. சந்திரசேன உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.எஸ்.சி. சந்தநாயக்கா ஆகியோரின் உத்தரவின் பேரில் புத்தளம் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமை யிலான குழுவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







