அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்களில் ஒருவரான கெலியென் கொன்வே, வெள்ளை மாளிகையிலுள்ள ஜனாதிபதியின் பிரதான அலுவலக அறையான ஓவல் மண்டபத்திலுள்ள கதிரையொன்றில் வித்தியாசமான பாணியில் அமர்ந்திருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
50 வயதான கெலியென் கொன்வே, குடியரசுக் கட்சியின் பிரசார முகாமையாளர் ஆவார். தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்ஆலோசகராக பணியாற்றுகிறார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கறுப்பினத் தலைவர்களை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்தார்.
ஓவல் மண்டபத்தில் நடந்த சந்திப்பின்போது அங்குள்ள சோபாவில் அமர்ந்து தனது செல்போன் மூலம் புகைப்படம் பிடித்த கெலியென், பின்னர் அப்படங்களை செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படமே இணையத்தில் பரவியுள்ளது.
பாதணிகளை அணிந்த நிலையில், ஷோபாவில் முழந்தாளிட்டதைப்போல் கெலியென் அமர்ந்திருந்ததை சிலர் விமர்சித்துள்ளனர்.






