கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு!!

212

கவனயீனத்துடன் வாகனம் செலுத்துவதால் தினமும் பல உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் சில பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் 6 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. உயிரிழர்வர்களில் கர்ப்பிணித் தாயொருவரும் அடங்குகின்றார்.

நேற்றிரவு ஏழு மணியளவில் அவிசாவரள – நீர்கொழும்பு பிரதான வீதியின் அமிதிரிகல எரெந்தெனிய பகுதியில் தனியார் பஸ்ஸூம் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான வேனில் 9 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆறு பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கவலைக்கிடமான நிலையிலிருந்த பெண்கள் இருவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதேவேளை, நேற்றிரவு கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியின் பாலம்போட்டாறு பகுதியில் மற்றுமொரு விபத்து பதிவானது.

திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிப் பயணித்த உழவு இயந்திரம், முன்னாள் வந்த சிறிய ரக லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சிறியரக லொறியில் பயணித்த 16 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகாலை 3.30 அளவில் ஹிக்கடுவை – திரானகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.

காலியிலிருந்து – ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி வேகக்கபட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மதில் சுவருடம் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, கஹட்டகஸ்திகிலிய – மெக்கிச்சாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில், பின்னால் வந்த வாகனமொன்று மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் தாய் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பண்டாரவளை – எத்தலபிடிய பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்தார்.

தனது பிள்ளையுடன் சந்தைக்குச் சென்று வீடு திரும்பிய இவர் காரை நிறுத்துவதற்கு முயன்றபோது அது 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பிள்ளை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.