பொரளை பிரதேசத்தில் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் பெருந்தொகையான பணத்துடனான பையை திருடியதுடன் அதிலிருந்த கடனட்டையை கொண்டு வர்த்தக நிலையம் ஒன்றில் ஆடைகளை கொள்வனவு செய்த சந்தேக நபர்களான இரு பெண்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி காலை 10 – 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இச்சந்தேகநபர்கள் இருவரும் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடமிருந்து 102, 300 ரூபா பணத்துடன் கூடிய கைப்பை ஒன்றை திருடியதுடன் அதிலிருந்த கடனட்டையை பயன்படு த்தி பொரளை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் சுமார் 270, 705 ரூபா பெறுமதியான ஆடைகளை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு கடனட்டையை உபயோகித்து ஆடை கொள்வனவில் ஈடுபடும் காட்சிகள் குறித்த ஆடை விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன. அக்காட்சிகளை கொண்டு சந்தேக நபர்களின் முகங்களை இனங்கண்டுள்ள பொலிஸார், அவர்களை கைது செய்யும் பொருட்டு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சந்தேகநபர்களான படத்தில் காணும் பெண்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 85 91 587, 077 – 72 64 299, 011 – 26 93 938, 011 – 26 94 019 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடக மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.






