பெண்களை மாத்திரம் ஊழியர்களாகக் கொண்ட விமான பயணிகள் விமானமொன்றை முதல் தடவையாக உலகை சுற்றிவரும் பயணத்தில் தான் ஈடுபடுத்தியதாக எயார் இண்டியா நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடந்த வாரம் இந்த விசேட விமான சேவை நடத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எயார் இண்டியாவின் பிளைட் ஏ.ஐ. 173 விமானம், கடந்த 27 ஆம் திகதி புது டில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிராசிஸ்கோ நகரை நோக்கி புறப்பட்டது. பசுபிக் சமுத்திரத்துக்கூடாக அமெரிக்காவை அடைந்த அவ்விமானம் பின்னர், அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து, கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் புது டில்லியை அடைந்தது.
இதன் மூலம் உலகை சுற்றிவரும் பயணத்தை இவ்விமானம் பூர்த்தி செய்தது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தின் விமானிகள், விமான சிப்பந்திகள், விமானத்தை சோதனையிட்டு அதன் பயணத்துக்கு அனுமதி அளித்த பொறியியலாளர்கள், விமானம் புறப்படுவதற்கு அங்கீகாரம் அளித்த வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனைவரும் பெண்களாக இருந்தனர் எனவும் எயார் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்றிலும் பெண்களை மாத்திரம் ஊழியர்களாகக் கொண்ட பயணிகள் விமானிகள் சேவை பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ள போதிலும், அத்தகைய ஒரு விமானம் உலகை சுற்றி வந்தமை இதுவே முதல் தடவையாகும் என எயார் இண்டியா நிறுவனம் கூறுகிறது.
இதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் வேறு பல சர்வதேச மற்றும் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் விமானங்களில் பெண்களை முற்றிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.








