இயக்குனர் சங்கத் தலைவராக விக்ரமன் தெரிவு: விசு தோல்வி.

503

vikraman

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்ரமன் தலைமையிலான ஒரு அணியும் நடிகரும் இயக்குனருமான விசு தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டது.

இதில் விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும் போட்டியிட்டனர்.

மேலும், துணை தலைவர் பதவிக்கு பி.வாசுவும் , கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியிட்டனர். இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, சண்முக சுந்தரம், ஏகம்பவாணன், பேரரசு ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமலை உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

விசு தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விசுவும், செயலாளராக ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. துணை தலைவராக மங்கை அரிராஜன், அரவிந்த்ராஜ் ஆகியோரும் இணை செயலாளர்களாக செய்யாறு ரவி, வி.பிரபாகர், ஜெய்பிராகஷ், கண்ணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ரவிமரியா உள்ளிட்ட 12 பேரும் போட்டியிட்டனர்.

2700 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்திற்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் வாக்களித்தனர்.

மேலும் நடிகர்கள், சத்யராஜ், பார்த்திபன், எஸ்.வி.சேகர், ராமராஜன் ஆகியோரும் படம் இயக்கி உள்ளதால் அவர்களும் வாக்களித்தனர். இந்த வாக்குபதிவு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.

இதில் இயக்குனர் விக்ரமன் 716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விசு 556 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மற்ற பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

இதேவேளை நடிகர் ரஜினின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இத்தேர்தலில் வாக்களிக்க வந்தார். ஆனால் உள்ளே நுழைந்த அவரை தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதற்கு வருடா வருடம் ரூ.600 சந்தா செலுத்த வேண்டும்.

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இந்த தொகையை செலுத்தவில்லையாம். எனவே அவர் வாக்களிக்க அனுமதி கிடையாது எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கினார். தற்போது கடல் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.