பிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல் : மூவருக்கு சிறைத்தண்டனை!!

212

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதியில் கடையொன்றை நடத்திச் சென்ற 38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்ற இலங்கையர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று சிறுவர்கள் அடங்கிய குழுவினரே, கடைக்காரர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மற்றும் 15 வயதுடைய ஒரு இளைஞரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 16 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பதால், சட்டவிதிகளுக்கு அமைய அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் தனது கடையை திறக்க சென்ற போது, குறித்த குழுவினர் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஆயத்தங்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் “நீ வீட்டுக்கு செல்… இது எங்கள் நாடு” என இந்த இளைஞர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி காலை 8 மணியளவில் நடைபெற்றுள்ளது.

நோரிஸ் கிரீன், லிவர்பூல் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து சிற்றம்பலம் உடைந்த தாடை மற்றும் காயமடைந்த கண்களுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

தாக்குதல் காரணமாக அவருக்கு பல முறிவுகள் ஏற்பட்டுள்ளமையுடன் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிமன்றில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேதனைமிக்க சிசிடிவி காணொளி காண்பிக்கப்பட்டது. அதில் சிற்றம்பலம் தைரியமாக தாக்குதல்காரர்களின் கத்தியை தட்டிவிட முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் இளைஞர்களின் மிரட்டல்களுக்கு அடிபணியவும் இல்லை, அவர்களின் நடத்தைகளை கண்டு அஞ்சவுமில்லை எனவும், அவர் தனது கடையை திறக்கும் வேலையை தொடர்ந்துள்ளார் எனவும் நீதிபதி எலிசபெத் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.

கடையின் பூட்டை திறப்பதற்காக அவர் கீழே குனிந்த போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர்களில் ஒருவர் அவரது முகத்தில் கடுமையாக உதைத்துள்ளார்.

ஒருவர் வேகமாக உதைத்தமையினால் அவர் பின் பக்கமாக விழுந்ததனை இந்த காணொளியில் பார்க்க முடிகின்றது. மற்றைய இருவரும் அவரது தலையில் உதைத்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் இது ஒரு வினோத சம்பவமாக மற்றவர்களுக்கு காட்டுவதற்கு மூவரில் ஒருவர் சம்பவத்தை தொலைப்பேசியில் வீடியோ செய்துள்ளார். இதனை அவமானமாக பார்ப்பதோடு இந்த வழக்கில் கிட்டத்தட்ட உறைய வைக்கும் அம்சமாக இது பார்க்கப்படுகின்றது.

இந்த வழக்கின் ஒரு சாட்சியாளராக மத்தேயு மெக்லாரன், சம்பவத்தை நீதிமன்றில் விபரித்துள்ள நிலையில், இந்த இனவாத குழுக்கள் பயன்படுத்தி ஒவ்வொரு வார்த்தைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இலங்கையர் தான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அல்ல என கூற முயற்சித்துள்ள போதிலும் அந்த இளைஞர் தங்கள் இனவாத துஷ்பிரயோகங்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாக, இந்த வழக்கை முன்னெடுத்த நிக்கோலஸ் வாக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 16 வயதுடைய ஒரு இளைஞர் மற்றும் 15 வயதுடைய இளைஞருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு மற்றைய 16 வயதுடைய இளைஞருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.