வவுனியா ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகள் அளவிடும் பணிகள் ஆரம்பம்!!

290

 
வவுனியாவில் ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகளை இராணுவம் (18.01.2017) அன்று உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளித்திருந்த நிலையில் இன்று (13.03.2017) காணிகளுக்கு சொந்தமான மக்கள் தங்கள் காணிகளை அடையாளம் காட்டுவதற்கு நிலஅளவைத் திணைக்களதின் அதிகாரிகளுடன் வந்திருந்ததுடன் சட்டப்படி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியை 15 குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பார்வையிட்டதுடன் தங்கள் காணிகளின் எல்லைகள் மற்றும் வீடுகளை கிராம உத்தியோகத்தருக்கு அடையாளம் காட்டினர்.

மொத்தமாக ஓமந்தை இறம்பைக்குளம் சோதனைச்சாவடி 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை தவிர்த்து அப்பகுதியில் 5.50 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.

ஓமந்தை காணியை பார்வையிட்ட உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக நாங்கள் ஓமந்தை இறம்பைக்குளத்திலிருந்து நிரந்தரமாக இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றிருந்தோம். அன்று தொடக்கம் எங்களது சொந்த மண்ணில் எப்போது வாழப்போகின்றேம் என்ற ஏக்கம் இருந்துகொண்டிருந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கூட ஓமந்தை சோதனைச்சாவடியூடாக பயணிக்கும்போது நாங்கள் வாழ்ந்த மண்ணை கண்ணீரோடு பார்த்துக்கொண்டு சென்றிருக்கிறோம்.

இராணுவத்தினர் எங்களது காணிகளை விடுவித்துள்ள நிலையில் இன்று எங்களது சொந்த மண்ணில் கால்பதித்து இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக எங்கள் சொந்த பந்தங்களை இழந்திருந்த நிலையில் எங்கள் நிலம் விடுவிக்கப்பட்டது எங்களது அகதி வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதும் ஆறுதலான விடயமாக இருக்கின்றது.

அரசாங்கம் எங்களது காணிகளை விடுவித்திருக்கிறது. ஆனால் குடியிருக்க எங்களுக்கு ஒரு வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனர்.