வவுனியா சீட்- வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

488

 
உட்படுத்தலை இலக்காகக் கொண்டு ‘சமுதாயமே நாம் வேண்டுவது உங்கள் பரிதாபத்தை அல்ல பங்குபற்றலையே’ என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (SEED) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றிருந்தது.

இதன் ஒரு கட்ட நிகழ்வாக கடந்த (22.02.2017) அன்று 08 கிலோமீற்றர்களை உள்ளடக்கி வீதி ஒட்ட நிகழ்வு நடைபெற்றிருந்ததுடன். இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கடந்த (11.03.2017) அன்று வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில் 450 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்ததுடன் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் சார்ந்த விழிப்புணர்வை சமூகத்திற்கு வழங்குவதாகவும் அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் கொடியேற்றும் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வவுனியா வடக்கு வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் மாவட்ட கொடியினை வவுனியா பிரதேச செயலகம், பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுபாசினி சிவதர்சன் அவர்களும் பாடசாலை கொடியினை சீட் நிறுவன இயக்குனர் திருமதி.வாசுகி இராஜேந்திரா அவர்களும் ஏற்றி வைத்திருந்தனர்.

இன் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக வாழ்த்து செய்தியினை ஓய்வு பெற்ற கல்வியற்கல்லூரி உப பீடாதிபதி ஆ.தெய்வேந்திரன் கூறியிருந்தார். இதில் விசேட தேவை மற்றும் இயற்கைவளப் பாதுகாப்பினை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும் நடைபெற்றது விசேட அம்சமாகும்.

மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க மாவட்ட சமூக சேவை அதிகாரி செ.ஸ்ரீனிவாசன், மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், வங்கி முகாமையாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.