2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை!!

253

2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, நாசாவுக்கு 19.5 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி ஒதுக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான விளக்கமான திட்ட அறிக்கையைத் தயாரித்து, வரும் டிசம்பர் முதலாம் திகதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போலோ விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது.

அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 ஆம் ஆண்டளவில் விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

சிவப்பு கோளில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒட்சிசன் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வினை இந்த விண்கலம் மேற்கொள்ளும் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.