இளவரசன் தற்கொலை செய்துகொள்ளவில்லை : வெளியான திடுக்கிடும் தகவல்!!

290

கடந்த 2013ம் ஆண்டு தர்மபுரியில் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடக்கிறார்.

அவரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அவரது மனைவியின் குடும்பத்துக்கும் அவருக்கும் இடையில் சட்ட ரீதியாக வாதங்கள் நடந்து வந்த நிலையில் மர்மமான முறையில் இளவரசன் இறக்கிறார்.

இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இளவரசன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சம்பத் குமார், ‘இளவரசன் கொலை செய்யப்பட்டாரா என்பதற்கு எங்களிடம் தற்போது போதிய ஆதாரம் இல்லை.

ஆனால், அவர் கண்டிப்பாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை நிரூபிக்க முடியும்’ என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை அவர் தி ஒயர் (The Wire) இணைய பத்திரிகையில் வெளியாகியுள்ள நேர்காணல் மூலம் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த பேட்டியில் சம்பத் குமார், ‘ஜூலை 5-ம் தேதி 2013-ம் ஆண்டு, இளவரசன் இறந்து ஒரு நாள் கழித்து, மருத்துவர் துந்தர் (Dr.K.Thunder) செய்த பிரேதப் பரிசோதனையிலும் நான் ஜூலை 11-ம் தேதி செய்த பிரேத பரிசோதனையின் போதும் அவர் உடம்பில் க்ரீஸ் கரை என்பது இல்லை.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜூலை 13-ம் தேதி மேற்கொண்ட பிரேத பரிசோதனையின்போது, இளவரசன் உடலில் க்ரீஸ் கரை தோன்றுகிறது. இதுதான், மிகவும் சந்தேகத்தைக் கிளப்பும் விஷயம்.’ என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைபடியே, இளவரசன் மரணம் தற்கொலையே என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், இளவரசன் மரணத்தை விசாரணை செய்வதற்கு ஒரு நபர் கொண்ட கமிட்டி நீதிபதி சிங்காரவேலுவை வைத்து அமைக்கப்பட்டது.

இவர், வரும் மார்ச் 14 முதல் 16-ம் தேதிகள் வரை தர்மபுரியில் மேலும் ஒரு சுற்று விசாரணையை நடந்த உள்ளார்.

இந்நிலையில், சம்பத் குமார் நீதிபதி சிங்காரவேலுவை சந்தித்துள்ளார். ‘என் கருத்தை எடுத்து நீதிபதிக்கு விளக்கினேன். அவரும் என் கருத்துகளை ஆழ்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டார்.

எங்களால், இளவரசன் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றாலும் அவர் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்க முடியும்.’ என்று கூறியுள்ளார் சம்பத் குமார்.