பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்ற 22 வயது யுவதி ஒருவர் தாம் கடமையாற்றிய வீட்டின் உரிமையாளர்களால் கொடுமைப்படுத்தப்படுவதனை தாங்க முடியாமல் அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று அப்பிரதேசத்தில் தனியாகவிருந்த பாழடைந்த வீடு ஒன்றுக்குள் இரண்டு வாரங்கள் எதுவித உணவுமின்றி உயிரிழந்த சம்பவமொன்று குறித்த தகவல் நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் கீர்த்தி சிரிஜயந்த முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பழைய மஸ்கெலியாவைச் சேர்ந்த கருப்பையா தர்ஷனி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இந்த யுவதி இரண்டு வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத்துக்குச் சென்றுள்ளார்.
இவர் குவைத்திலுள்ள வீட்டுக்குச் சென்ற நாள் முதல் வீட்டு உரிமையாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த யுவதி தன்னை எப்படியாவது மீண்டும் இலங்கைக்கு அழைத்துக் கொள்ளும்படி தனது வீட்டாருக்கும் இலங்கை தூதரகத்துக்கும் பலமுறை அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மரண விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
பின்னர் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய இந்த யுவதி அதே பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்துள்ளார்.
சுமார் இரண்டு வாரங்கள் உணவோ தண்ணீரோ இல்லாத நிலையில் இந்த யுவதி பட்டினியால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இம் மரணம் தொடர்பாக மரண விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பகிரங்க தீர்ப்பளித்தார்.






