சினிமா நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் ஏற்பட்ட பரபரப்பு!!

285

cinema

சென்னையில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின்போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார்.

இரண்டாம்நாளான ஞாயிறன்று கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சியும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார்.

பின்னர் மாலையில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற ஜுகல்பந்தி நடைபெற்றது. பழைய பாடல்கள் முதல் சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை பாடப்பட்டது.

பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த தெலுங்கு திரையுலகின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவரான ஆர்.நாராயணமூர்த்தி திடீரென மேடையேறினார்.

இது சினிமா நூற்றாண்டு விழாவா? இசைக் கச்சேரி நிகழ்ச்சியா? என்று சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் அவரை மேடையை விட்டு கீழே இறக்கினர்.

பின்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடத் தொடங்கவே, மீண்டும் மேடையேறிய நாராயணமூர்த்தி, எஸ்.பி.பி கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றுள்ளார்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த விழாக்குழுவினர் அவரை மேடையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அரங்கை விட்டு வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.