பாதுகாப்பு மற்றும் மனித உரிமை விடயங்களைக் கொண்டு சில நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அதனால் சில நாடுகள் அரசியல் ரீதியில் நிலைகுலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் அரச தலைவர்கள் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஏற்பட ஐக்கிய நாடுகள் சபை தனது அதீத பங்களிப்பை செய்துள்ளது. இலங்கை தீவிரவாதத்திற்கும் சுனாமி அழிவிற்கும் உலக உணவு பிரச்சினைக்கும் வெற்றிகரமாக முகம்கொடுத்த நாடாகும்.
5 வருடங்களில் இலங்கை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு சில தரப்பில் இருந்து இடையூறு ஏற்படுகிறது. நாடுகள் தனிக் கலாசாரம், பண்பாடு, வரலாறு கொண்டவை. அதனை பாதுகாக்க ஐநா சபை முன்வர வேண்டும்.
சில நாடுகளுக்கு தடை விதிப்பது குறித்து மீள சிந்திக்க வேண்டும். அதனால் சில நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கியூபா அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்களுக்கு வாக்களிப்பு வசதி கிடைத்துள்ளது. அவர்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.
இலங்கை தொடர்பில் சில நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒன்றாக செயற்பட வேண்டும்.
சில தரப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்யக்கூடிய இடமாக ஐக்கிய நாடுகள் சபை அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.