இலங்கை கிரிக்கெட் அணியின் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் தாக்குதல்!!

294

பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளது.

பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது.கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பங்களாதேஸ் அணி தனது 100-வது டெஸ்டில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது. அத்துடன் இலங்கைக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணியின் தோல்வியை அங்குள்ள பத்திரிகைகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இலங்கை அணி மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒரு பத்திரிகை மரணச் செய்தி என இலங்கையின் தோல்வியை குறிப்பிட்டு, ஆஷஸ் தொடர் வரலாற்றுடன் ஒப்பிட்டுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் 2017-ம் ஆண்டும் மார்ச் 19-ந்தேதி இலங்கை அணி மரணமடைந்து விட்டது. அணியின் உடலை எரித்து, அந்த சாம்பல் பங்களாதேஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்று எழுதியுள்ளது.

முன்னதாக, 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் பிராட் ஸ்போபர்த்தின் அசுர வேகப்பந்து வீச்சால், இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தனது முதல் தோல்வியை சந்தித்தது.

இது குறித்து லண்டன் “ஸ்போர்ட்டிங் டைம்ஸ்” பத்திரிகையில் ரெஜினால்டு ஷர்லி புரூக்ஸ் மிகவும் கேலியாக விமர்சனக் கட்டுரை எழுதினார்.

அதில் “1882-ம் ஆண்டு 29ந்தேதி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது. இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அணியின் உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்படும்’’ என கண்ணீர் அஞ்சலி போல குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை பத்திரிகையும் ஆஷஸ் தொடரை இந்த தொடருடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மாலைமலர்-